Thursday, July 16, 2026

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரல்

 

2026-ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் இன்று (16) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையதளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று, ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நேரடியாக அமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த தீர்மானம்


நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

கணிதம் போன்ற பாடங்களுக்கு நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், புதிய ஆட்சேர்ப்பு முறை மூலம் அந்தந்த பாடங்களுக்குத் தேவையான தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

2021-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முறையான ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த ஆண்டிற்குள் 30,000 புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என உறுதி அளித்தார்.

இதற்கான நிதி மற்றும் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் பட்டதாரிகள் உட்பட சுமார் 180,000 பேர் தோற்றியிருந்தனர். தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இதேவேளை அதிபர் சேவை சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடுவலயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

 

கடுவலை நவகமுவ பகுதியில் உள்ள வந்துராமுல்ல வீதியில் இன்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நவகமுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்கள், ஆபரணங்களுடன் மூவர் கைது

 

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஆபரணங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை, சீவலிபுர, மற்றும் பாணந்துறை நகருக்கு அருகில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆபரணங்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து, இரண்டு புள்ளிமான் கொம்புகள், யானைத் தந்தத்தை ஒத்த மாதிரி ஒன்று, பல கடற்சிப்பிகள், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட நெக்லஸ் ஒன்று, வளையல்கள் இரண்டு, யானைத் தந்தங்கள் நான்கு, தலா இரண்டு புலியின் பற்கள் மற்றும் நகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அலுபோமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, பழமையான யானைத் தந்தப் பெட்டி ஒன்று, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தாயத்துகள் நான்கு, வளையல் ஒன்று மற்றும் சிறுத்தையின் பற்கள் இரண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும், பாணந்துறை தெற்கு பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து புலியின் பல் ஒன்று மற்றும் அழிவின் அபாயத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கறுப்பு பவளத்தின் இரண்டு துண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 35, 37 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் சீவலிபுர, அலுபோமுல்ல, எவரியாவத்தை மற்றும் எனசல்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட வனவிலங்கு பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்திடிய வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு - நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு

 

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்துள்ளது.


உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மனுவை முழுமையான விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

மியன்மார் கடற்பரப்பில் இரு படகுகள் கவிழ்ந்ததாக அச்சம்

 

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பரப்பில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம் எனவும், அவற்றில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான ஆணைக்குழு அச்சம் வெளியிட்டுள்ளது.


குறித்த படகுகளில் பயணித்தவர்களின் நிலைமை தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புதிய உலகை Gen Z தலைமுறையினரே வழிநடத்த வேண்டும்"

 

தங்கள் தலைமுறையினர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிட்டதாகவும், தற்போதைய புதிய தலைமுறையினரின் (Gen Z) சிந்தனைகளையும் தேவைகளையும் அவர்களே நன்கு அறிவார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இளைய தலைமுறையினருடனான கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய உலகை வழிநடத்த இளைஞர்கள் பயமின்றி முன்வந்து தலைமைத்துவத்தை பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அவ்வாறு முன்வரும் இளைஞர்களுக்கு முழுமையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தனது காலத்தில் இளம் தலைவர்களுக்கு எவ்வாறு வாய்ப்பளித்தாரோ, அதேபோல் தற்போதைய இளைஞர்களும் தங்களுக்குத் தேவையான எதிர்காலத்தை தாங்களே வடிவமைக்க வேண்டும் என அவர் இதன்போது அறைகூவல் விடுத்தார்.

சொகுசு சிற்றுந்து தீ விபத்து

 

குருணாகல் பாடசாலை வளாகத்தில் 140 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிற்றுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிற்றுந்தை தீயிட்டுக் கொளுத்தியது அங்கிருந்த மாணவன் தான் என சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளுக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவனுக்கு எதிராக நேரில் கண்ட சாட்சிகளோ அல்லது அறிவியல் சான்றுகளோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் உதவி நாடப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 15, 2026

தங்கக் காலணி யாருக்கு? அனல் பறக்கும் கால்பந்து உலகக் கிண்ணம்

 

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'தங்கக் காலணி' (Golden Boot) விருதிற்கான போட்டி உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

தற்போது லியோனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

பிரான்ஸ் அணி அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், எம்பாப்பே மூன்றாவது இடத்திற்கான போட்டியில் தனது கோல் கணக்கை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறம், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் களமிறங்குகிறார்.

இவருடன் இங்கிலாந்தின் ஹரி கேன் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் ஆகிய இருவரும் தலா 6 கோல்களுடன் மெஸ்ஸிக்கு கடும் சவால் விடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணிக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளதால், அவர்கள் மெஸ்ஸியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் நோர்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் 7 கோல்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

களத்தில் லியோனல் மெஸ்ஸி, ஹரி கேன் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் ஆகிய மூவருக்கும் இடையே கோல் அடிப்பதில் நிலவும் இந்த கடும் போட்டி, கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம்: 2026 இன் முதல் பாதியில் 4.75 மில்லியன் பயணிகள் பயணம்

 

இலங்கையின் வானூர்தி போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகின்ற வகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் சுமார் 4.75 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2026 ஜனவரி முதல் ஜூன் வரை 4,748,481 பயணிகளும், 30,659 வானூர்திகளும் கையாளப்பட்டுள்ளன.

மேலும் வானூர்தி நிலையம் வழியாக 1,146,573 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

வானூர்தி நிலையம் மற்றும் வானூர்தி போக்குவரத்து சேவைகள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதிலும் 10.21 மில்லியன் பயணிகள், 95,629 வானூர்திகள் மற்றும் 946,811 பரிமாற்றப் பயணிகள் (transit passenger) கையாளப்பட்டனர்.

மக்களையும் கலாசாரங்களையும் இணைப்பதிலும், நாட்டின் சுற்றுலா மற்றும் வானூர்தி போக்குவரத்துத் துறைகளை வலுப்படுத்துவதிலும் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளையில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

 

தம்புள்ளை விஹாரை சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கோயில் முற்றத்தில், வாடகை வியாபார தளங்களில் வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் தாக்குதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீண்டகால பகை காரணமாக ஏற்பட்ட இந்த மோதலில், தற்காலிகமாக வசித்து வந்த 53 வயதுடைய சுனில ரத்நாயக்க என்பவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவரது மனைவி தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள வியாபார தளத்தை சேர்ந்த நபர் இந்தத் தம்பதியினரைத் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தம்புள்ளை தலைமையக காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கிருந்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தம்புள்ளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மிக்ஸர் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு

 

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குன்னும்புறம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 3 வயது ஆண் சிறுவன் வீட்டில் வைத்து 'மிக்ஸர்' தின்பண்டத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளது.

அப்போது, அந்த மிக்ஸரில் இருந்த வேர்க்கடலை எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.

இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தொண்டையில் சிக்கிய வேர்க்கடலையை எடுக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இதனால் சிறுவன் மூச்சுவிட முடியாமல் திணறியதைக் கண்ட பெற்றோர், சிறுவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலைக்கு தற்காலிகமாக இடமாற்றம்

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலை சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் இறுதி கதவை உடைத்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, நிலைமையைக் கட்டுப்படுத்த குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, கைதிகள் குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் மீது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாகவும், சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அந்த அதிகாரி துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதல்களில், 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதிகாரிக்கான மிரட்டலே சிறைச்சாலை வன்முறையின் ஆரம்பப் புள்ளி! சிஐடி சமர்ப்பித்த முழு அறிக்கை!

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (14) தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.

வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வன்முறை தொடங்கிய விதம்

கடந்த ஜூலை 5 ஆம் திகதி, A1 விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லே கம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக உடற்பயிற்சி செய்ய நேரம் வேண்டுமெனக் கோரியுள்ளார்.

அவரது கோரிக்கை மறுக்கப்பட்டதையடுத்து, அவர் சிறைச்சாலை அதிகாரி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை விடுதி திறக்கப்பட்டவுடன், அந்த கைதி A2 விடுதிக்குள் புகுந்து மற்ற கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதே இந்த விரிவான வன்முறைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் இரு கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார். மொத்தம் 36 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாரிகளைத் தாக்கிய கைதிகள்

வன்முறை சிறைச்சாலை முழுவதும் பரவிய நிலையில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டடங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் சிறைச்சாலை அதிகாரிகள் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.

வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து 89 அவசரகால மீட்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மறுநாள் (6) காலை உணவளிப்பதற்காக அதிகாரிகள் உள்ளே சென்றபோது, "நாங்கள் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறோம்" என கைதிகள் மிரட்டியுள்ளனர்.

சிகரெட் வரி குறைப்பால் ரூ.25 பில்லியன் வருமான இழப்பு: வெரிட்டே ரிசர்ச் தகவல்

 

உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மட்டத்தை விட இலங்கையில் சிகரெட்டுகளுக்கான வரி குறைவாக இருப்பதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய 25 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு 8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என அந்த கொள்கை பகுப்பாய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிகரெட் வரி அறவீடு மூலம் ஏற்படும் நிதி இழப்புகளைக் கண்காணிப்பதற்காக, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட 'Cigarette Tax Leakage Tracker' எனும் இணைய வழி கண்காணிப்புத் தளத்தை அறிமுகப்படுத்திய போதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, புகையிலை நுகர்வை வெற்றிகரமாகக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், ஒரு சிகரெட்டின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75% வரியாக அறவிடப்பட வேண்டும்.

இலங்கை 2018 ஆம் ஆண்டில் இந்த மட்டத்துக்கு நெருக்கமாக வந்திருந்தது. அப்போது சில்லறை விலையில் 74% வரியாக அறவிடப்பட்டது. இருப்பினும், அண்மைக்காலமாக அந்த வரி வீதம் குறைவடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு முதல் அது 67% என்ற மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையே பாரிய வருமான இழப்புக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக்கும் வெரிட்டே ரிசர்ச், கொள்கை வகுப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகரெட் வரி கொள்கைகளின் நிதித் தாக்கத்தை நேரலையில் கண்காணிப்பதற்கான வெளிப்படையான கருவியாக இந்தத் தளம் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.